கெஹ்ரயான் - எல்லையற்ற ஆதரவு நிலையை கோரும் பெண்மை

இணைந்து வாழ்தலில் (Living Together) உறவுச் சிக்கல்கள் தீர்க்கப்படக் கூடியவை. விருப்பம் இல்லாமல் வாழும் நிர்ப்பந்தம் எதுவுமில்லை. ஆனால் யாருடைய பக்க சார்பையும் அயலாமல் சொந்த முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம். பொதுவாக கட்டாய திருமண உறவுகளில் காணப்படும் சடங்குகளின் மீதான நம்பிக்கை, இணையரிடையே பகிரப்படாமல் இருக்கும் உடல் மற்றும் மன உணர்வுகளின் இறுக்கம், போன்ற பிரச்சனைகள் இணைந்து வாழ்தலில் காண்பது குறைவு. ஏனேனில் இதுபோன்ற விஷயங்கள் கலந்துரையாடப்படுகின்றன. எனினும், இணைந்து வாழ்தலில் இருக்கும் பிரச்சனைகளை அலசுவதும் அவசியம். காரணம் ஆண்- பெண் உறவுகள் இருவேறு துருவங்கள் என்றாயினும் எதிர் பாலின ஈர்ப்பு என்பது எல்லா உயிரினங்களுக்கும் பொதுவான ஒன்று. இணைந்து வாழ்தலில் இருவருக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது சமத்துவ பகிர்வு ஆகும். சமத்துவ பகிர்வு சாத்தியமா? என்ற கேள்விக்கு விடை எதுவென காண வேண்டும். பொருட்களுக்கு இடையேயான சமத்துவ பகிர்வா? அல்லது மனங்களுக்கு இடையே உண்டான சமத்துவமா? என்பது என்பதற்கான கூறுகளை பார்க்க வேண்டும். காலந்தொட்ட வரிசையில் கூற வேண்டுமெனில் ஒருவரை ஒருவர் கலாச்சார சுட்டுதலை காட்டி குற்றப்படுத்துவதும், சுரண்டுவதும் அல்லாத உறவே சமத்துவ உறவு என அழைக்க முடியும். இதில் ஆண் பெண் இருவருடைய பொருத்துதல் நிலைப்பாடும் சமம். எனினும், இதற்குள் இருக்கும் சிக்கல்களை அலசுவோம். புரிதலின்மை, நேரப்பகிர்வு , மனசங்கடங்கள் மூலம் பிரிதலின் போது அனுகூலம் என்பது ஆணுக்கு மட்டுமே என்ற அதிகார சமநிலையின்மை ஏற்படுகிறது. பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து பிரிந்து செல்வது, பிரிவை சுயவுரிமை என்ற திடீர் நிலைப்பாட்டை எடுப்பது, உணர்வுகளை கொச்சைப்படுத்துவது இதுபோன்ற குறைகள் எந்த நிலையிலும் தவறான உறவுகளுக்கு முன் உதாரணமாக அமையும். அவரவர் உணர்வு சுதந்திரம் எனும் நிலையில் இணையர் என்ற சமநிலை தவறி பெண்ணை ஆண் சுரண்டுவது, அல்லது ஆணை பெண் சுரண்டுவது என்ற பிற்போக்கு மனநிலைக்கு தள்ளப்படுவதும் உண்டு. அவரவருக்கான சுதந்திரத்துடன் இணைந்து வாழ்ந்தும் இருவருக்குமான உண்மையான காதல் உறுதித்தன்மையை அடையும் பட்சத்தில், திருமணம் என்ற சடங்கு தேவையற்றதாக மாறுகிறது. ஒருவர் மற்றொருவர் மனைவியை காணக் கூடாது, தான் திருமணமானவள் என்பதை மற்றவருக்கு காட்டிக் கொள்ள வேண்டும் என்ற பெண் கட்டமைப்பு பின்னடைவு கலாச்சாரம் ஆகும். இணைந்து வாழ்தலில் பெண்களே தங்களுடைய வெளித்தோற்றத்தை முடிவு செய்கிறார்கள். அனுமதி பெற்று உடை அணிவது, கட்டளைகளுக்கு அடிபணிந்து போவது போன்ற சுதந்திரமற்ற சிறை மனநிலையில் இருக்கப் போவதில்லை. இவையாவுமே பிற்போக்கு தன்மையை அடித்து நொறுக்கப்படுவதற்காக வந்தவை அல்ல. இவை இயற்கையின் படைப்பின் வழியாக சிந்தனையில் கடத்தப்பட்ட பிறப்புரிமை என்பதை புரிந்து கொள்வது மிக அவசியம். 


கலாச்சார சீர்கேடுகள் என்ற பெயரில் இவை யாவும் பூமிக்கு வந்தவுடன் பெண்கள் வாழ்வதற்காக வாங்கிக் கொண்டு வர வேண்டிய விசா போன்ற கட்டமைப்பை உருவாக்குவதை எதிர் போராட்டத்தின் வழியாக எதிர்க்கக் கூடியவை. சடங்குகள் பெரும்பாலும் பெண்கள் சிலரால் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ள படுகின்றன. அவை சுற்றுப்புற உறவுகளின் கூடுதலுக்கான சமயமாக கருதிக் கொள்ளப்படுகிறது. அவற்றின் சாரம் முழு அமைப்பையும் உள்ளடக்குவது. ஏனேனில் அவை பெற்றோர்களால் கட்டாயமாக்கப்பட்ட உலகம். அதற்குள் அடிமைத்துவ மனநிலை உள்ளதே அன்றி வேறில்லை. 


தற்காப்பின்மை எனும் உணர்வு வெளி மற்றும் எல்லா உறுப்பு இருப்பு நிலையிலும் இருக்க கூடிய ஒன்றுதான். கூடுதலாக உறவுகற்ற தனிமை நிலையில் வரக்கூடியது என வரையறுக்கலாம். தற்காப்பு என்ற ஒன்றை இன்றைய சூழ்நிலையில் பூதாகரப்படுத்துவதுதான் குடும்பத் தின் மிக முக்கியமான குறிக்கோளாக திகழ்கிறது. குடும்ப அமைப்பு அன்பை பிரதான படுத்துவதை தவறி எல்லோரையும் ஆளுவது, அடிமைபடுத்துவதை நோக்கி தொக்கி நிற்கிறது. பாதுகாப்பின்மையால் வரும் பயமானது இடைவிடாது குடும்பம் என்ற அமைப்பால் மூடி பாதுகாக்கும் நிலை ஏற்படுகிறது. பாதுகாப்பு என்ற நிலைத்தன்மையில் எல்லோராலும் நசுக்கப்படும் சூழலுக்கு பெண்களின் சுதந்திரம் தள்ளப்படுகிறது. வெளி உலகை பற்றிய புரிதல் இல்லாததால், உறவுகளுக்குள் ஏற்படுத்தும் எச்சரிக்கை உணர்வு, பதட்டமும் சுய நலமும் கூடியதாக இருக்கிறது. நம்மை சுதந்திரத்தை பற்றியோ சமத்துவத்தை பற்றியோ சிந்தித்து பார்க்க முடியாத நிலைக்கு தள்ளிவிடுகிறது. 

பழைய சடங்கு களிலிருந்து விடுபட்டு புதிய ஆண் - பெண் உறவு நிலைகளை மேம்படுத்தும் சூழல் வளர்வது அவசியம். அதில் ஏற்படும் பிழைகளும் தவறுகளும் சரிசெய்யப் படவேண்டியவை. ஏனெனில், பழைய விதிகளை உடைத்து புதிய பாதையில் நடக்கும் மனிதர்களின் தவறுகளை தட்டி ஒதுக்காமல் மீண்டும் மீண்டும் சரிசெய்து பயணிக்கும் மனப்போக்கை வளர்க்க சமூகம் இன்னும் தயங்கி நிற்கிறது. 

யாருடைய சுதந்திரம் யாரால் தடுக்கப் பட்டாலும், எங்கு சமத்துவமற்ற சுரண்டல் ஏற்படினும் சட்டம் பாதிக்கப்பட்டவருடைய சார்பை எடுத்தாக வேண்டும். ஆண் - பெண் உறவில் ஏற்படும் பாதிப்புகள் உளவியல் மற்றும் உணர்தல் ரீதியாக மட்டுமே பார்க் கூடியது அல்ல. அவர்களுடைய பாதுகாப்பையும் சட்டம் உறுதி செய்ய வேண்டிய கடமை உள்ளது. இருவர் இணைந்து வாழ்தலில் திருமணம் என்ற ஒற்றை அமைப்பை மட்டுமே தொக்கி நிற்பது ஆண்மை என்ற அளவீடுகளிலிருந்து பெண்களை நிர்ணயிப்பது போன்றது. குடும்ப அமைப்புகள் எவ்வளவு பரஸ்பரம் தங்களுக்குள் உதவிக் கொண்டாலும் அது அவர்களுடைய சுதந்திரத்தை நசுக்கிய மற்றவருடைய முன்னேற்றம் ஆகும். இது ஒருவகையில் தியாக மனநிலையை உருவாக்கி கொள்வது. இது மனித சமநிலையை உடைக்கும் மேல் - கீழ் உளவியல் முரண்பாடு என்பதை உணரலாம். குடும்ப நலனில் மனிதர்கள் தனித்து விடுவதில்லை என்ற போதிலும் வாழ்வையும் மற்ற மனிதர்களையும் கண்டு ஓடி ஒளிந்து கொள்ளும் தடுப்புச் சுவராக நிலை பெற்றுள்ளது. தங்கள் சமூக அமைப்பை மட்டுமே நாடி அனைத்து உறவு தொகுதிகளும் நிர்ணயம் செய்து அமைக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. மனித உறவுகளின் வளர்ச்சி என்பது தனக்கு பொருத்தமான உறவை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமையில் அமைந்துள்ளது. விருப்பம் அல்லது தேர்ந்தெடுத்தல் அன்றி சமூக அவலங்களை காரணம் காட்டி தங்களை சமூகத்திலிருந்து விலக்கி கொள்வதை காட்டுகிறது. 

உண்மையில் அன்பு செய்வதற்கும் பாதுகாப்பு உணர்வை உறுதி செய்வதற்கும் தான் குடும்பமும் அதை சார்ந்த குடும்ப தொகுதி அமைப்பும் என்றால் அதன் இன்றைய நிலை என்ன? வன்முறையையும் ஆதிக்க மனநிலையையும் வளர்க்கும் போக்கையே அது கொண்டுள்ளது. இணைந்து வாழ்தலுக்கும் கூடி வாழ்தலுக்கும் வன்முறையும் ஆதிக்க அதிகார மனநிலையும் எப்போதும் தேவைப்படுவதில்லை. 

இந்திய சட்டவரைவில், இணைந்து வாழ்தலுக்கான சட்டபூர்வமான உறவுமுறை நிராகரிக்கப்பட்டதாகவே இருக்கிறது. திருமணம் என்ற சடங்கு வாயிலாகவோ அல்லது மதத்திற்கு கீழ் வரும் சடங்குகளின் வழியிலே மட்டுமே சட்டபூர்வமான திருமணம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை, பெண்களை ஏமாற்றும் பொய்யான வாக்குறுதிகள், ஆண்களை ஏமாற்றிய பொய்யான வாக்குறுதிகளினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடுத்த வழக்குகள் யாவும் நீதிமன்றங்களால் நிராகரிக்கப்பட்ட நிலையிலேயே இருக்கின்றன. சட்டபூர்வமான அங்கீகாரம் நீதிமன்றங்கள் தர தயங்குகின்றன. பொது சமூகம் அதை உடல் இச்சைகளுடன் தொடர்புடைய விடயமாக கருதி ஒதுக்கி வெறுப்பை உமிழ்கிறது.

இணைந்த வாழ்வில் ( Living together) வரும் தவறுகளை அவமதிக்கும் போக்கை நம்மால் பெருமளவு காண முடிகிறது. எவ்வகையிலும் இருவரால் பொருந்தி போகாவிட்டாலும் சமூகத்திற்காக கூடி வாழுங்கள் என்ற நசுக்கப்பட்ட அமைப்புகளில் வாழும் மனிதர்கள் தங்களின் பாதுகாப்பை அதற்குள்ளே மட்டுமே உறுதி செய்து கொள்பவர்கள் ஆவர். அதில் புறச்சூழலில் அவர்களால் இயல்பாகவோ மற்ற மனிதர்களுடன் உறவுடனோ பழகுவதற்கு தயக்கம் காட்டுபவர்களே அதிகம். 

பெண்கள் எவ்வகையிலேனும் சார்பு நிலையை பெறக்கூடிய நிலைக்கு தள்ளப்படக் கூடியவர்களாக ஆக்கப் படுகிறார்கள். அந்த சார்பு நிலை நம்பிக்கை தரக்கூடியதாக இருந்து வாழ்தல் செய்யும் பொழுது அவர்கள் அதை மகிழ்ச்சியாக ஏற்கிறார்கள். ஆனால் நம்பிக்கை அடைந்த பிறகு ஏமாற்றப்படும் பொழுது இதுவரை இல்லாத அளவிற்கு மன அழுத்தத்திற்கும் இழப்பிற்கும் வெறுப்பிற்கும் ஆட்பட்டவர்களாக வளர்த்தெடுக்கப் படுகிறார்கள். அதனாலேயே பெண்கள், சமூகத்தால் அளவற்ற ஆதரவு நிலையை பாரபட்சமன்றி பெறக்கூடிய நிலையில் இருக்கிறார்கள்.

இத்திரைப்படம், இரு காதலுருக்கிடையில் இருக்கும் பிரச்சனைகளை மட்டுமில்லாமல் தாயின் இழப்பு, அதற்கு காரணமாக கருதும் தந்தை மீதான அலட்சியம் என வலிமிகுந்த உணர்வுகளை கொண்டுள்ளது. இத்திரைப்படம் ஆண் - பெண் உறவுகளுக்கிடையே ஏற்படும் உறவு சிக்கலை சரி செய்ய முயற்சிக்கிறது. இணைந்து வாழும் உறவு நிலைக்குள் சிக்கி தவிக்கும் பெண்களின் உணர்வுகளை மற்றும் அழுத்தத்திற்கு உள்ளாக்கும் சிக்கல்களை ஆன்மாவோடு உரையாடச் செய்யும் கதைநகர்வுடன் எடுத்துரைக்கிறது.

கதாநாயகி அலிஷாவாக, தீபிகா படுகோன் நடித்துள்ளார். அலிஷா யோகா மையத்தை நடத்திக் கொண்டுள்ள பயிற்றுனர். புதிய தொழில்நுட்பங்களின் மூலம் யோகாவை கற்றுக்கொடுக்கும் முனைப்பில் ஈடுபடும் பெண். கதாநாயகன் ஜைனாக சித்தார்த் சதுர்வேதி நடித்துள்ளார். ஜைன் ரியல் எஸ்டேட் தொழிலதிபராவான். ஜைனின் காதலி தியாவாக அனன்யா பாண்டே நடித்துள்ளார். ஜைனுடன் பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள இருக்கும் பணக்கார பெண். 


அலிஷாவின் காதலனாக வரும் கரண் (தைரிய கர்வா) தனது முதல் புத்தகத்தை எழுதி முடிக்க சிரமமப்படுபவராக இருக்கிறான். இத்திரைப்படத்தின் முக்கிய கரு ஒரு பொய்யை நம்பகத்தன்மை யுடன் வெளிப்படுத்தும் பொழுது, அதற்கு எதிரான தார்மீக போராட்ட செயல்களில் ஈடுபடும் பொழுது ஏற்படும் விளைவுகள் எவ்வளவு சிக்கலானதாக அமைகிறது என்பதுதான். அப் போராட்டங்களுக்கு பிறகு வாழ்க்கை எவ்வளவு இழப்புகளையும் வலிகள் பின்தொடர்ந்து வருவதையும் எடுத்துரைக்கிறது. இதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களின் பிண்ணனியும் ஏதோவொரு குற்ற உணர்வை பிண்ணனியாக கொண்டுள்ளதாக இருக்கிறது. ஜைனும் அலிஷாவும் தாங்கள் பார்க்கும் முதல் சந்திப்பில் கவர்ந்து கொள்கின்றனர். கரணிடமிருந்து வெளிப்படையாக விலக இயலாமல் ஜைனுடன் காதல்வயப்படுகிறாள் அலிஷா. அதே தருணத்தில் ஜைனும் தன்னுடைய காதலி தியாவிற்க்கு தெரியாமல் அலிஷா வுடன் ஜைன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறான். இது நீண்ட நாட்களுக்கு செல்லச் செல்ல அலிஷாவிற்கு மன வலியையும் மன அழுத்தத்தையும் அதிகரிக்கிறது. கரண் தன்னுடைய முதல் புத்தகம் நிராகரிக்கப்பட்டதை அலிஷாவிடம் தெரிவிக்காததால் அதை காரணம் காட்டி அவனை விட்டு விலகுகிறாள். இதற்கு காரணம் ஜைன் மீதான நம்பிக்கை மட்டுமே ஆகும். 

உண்மையில், அலிஷாவின் சிறுவயதில் தன்னுடைய அம்மாவிற்கும் அப்பாவிற்கும் தீர்த்துக் கொள்ள முடியாத பிரச்சனையாக கருதும் ஒன்று இருக்கிறது. அது என்னவென்று அவளால் அப்போது புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அவளுடைய அம்மாவினுடைய இழப்பு அவளை தன்னுடைய தந்தையிடமிருந்து விலகியிருக்க காரணமாகிறது. தந்தையினுடைய பிடிவாதமும் அடக்குமுறையும் தான் தாயினுடைய தற்கொலைக்கு காரணமென எண்ணுகிறாள். தந்தையுடன் இறுதிவரை குறைந்த பேச்சுவார்த்தையும்,ஒருவித அலட்சியத்தையும் கடைபிடிக்கிறாள் . 

அலிஷா மற்றும் தியா உடனான ஜைனுடைய காதல் இருபக்க நாணயமாக இருக்கிறது. அதற்கு காரணம், டியாவுடன் காதல் உறவை முறித்துக் கொள்ளாமல் அலிஷா வுடன் தொடரக்கூடிய காதலாக இருக்கிறது. ஜைனுடைய பங்கு நிறுவனம் ஒன்று ஊழலில் சிக்கிக்கொண்டதன் காரணத்தால் அந்த பங்கை திருப்பித்தர வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறான். அந்த நிலைமையை சரி செய்ய தியாவினுடைய சொத்து மதிப்பு தேவைப்படுகிறது. இதன் காரணமாக தியாவை விட்டு பிரிய வேண்டாமென்று ஜைன் உதவியாளர் ஜிட்டேஷ் கட்டாயப்படுத்துகிறார். 

நிதிநிலையை சரி செய்வது ஒருபுறமும் அலிஷாவினுடனான இணைந்து வாழும் வாக்குறுதி ஒரு புறமும் ஜைனை விளிம்புநிலைக்கு தள்ளி விடுகிறது. இத்திரைப்படம் நடுத்தர வர்க்கத்தை மட்டுமல்லாமல் ஒரு படி மேலே பணக்கார இளைஞனுக்கும் நடுத்தர பெண்ணிற்கும் இடையேயான இணைந்து வாழ்தலில் உள்ள சிக்கலை முன்வைக்கிறது. தன் சொத்துக்களை இழப்பது ஒரு புறம் இருப்பினும், ஜைன் தான் அலிஷாவிற்கு கொடுத்த நம்பிக்கையை காப்பாற்றும் உறுதிப்பாட்டை எதிர்கொள்ள இயலாததால் அவனுடைய தோல்வி பங்குகளை முன்வைத்து தீர்மானிக்கப் படுகிறது. இக்கதை இணைந்து வாழும் காதல் வாழ்க்கையை வணிக தொடர்புடனான சிக்கலையும் வெளிப்படுத்துகிறது. உறவு நிலையை உண்டாக்குவதற்கும் இடையில் இருக்கும் வணிக நோக்கங்களை வெளிப்படையாக எதிர் கொள்கிறது. 

ஆண் - பெண் உறவு நிலையில் நம்பிக்கையும், வாக்குறுதியும் குறிப்பிட்ட முடிவற்ற எல்லையை கொண்டிருக்கிறது. அது வணிக காரணங்கள் மற்றும் சிற்சில ஈகோ காரணங்களுக்காக தகர்க்கப்படுகிற போது ஏற்படும் பாதிப்புகள் மனநிலையை இழக்க செய்யும். பொய்யான வாக்குறுதிகளை தந்து இருபாலினரில் ஒருவர் ஏமாற்றப்படும் பொழுது சமநிலை தவறி பெரியளவில் எதிர்ப்புகளும் துரோக மனப்பான்மையும் விளைகிறது. தியாவை ஏமாற்றிக் கொண்டிருப்பதாக குற்ற மனப்பான்மையுள்ள அலிஷா ஜைனிடம் பெரும் கோபம் கொள்கிறாள். தான் கர்ப்பமாக இருப்பதையும் தங்களுடைய உண்மையான காதலையும் தியா விற்கு கூற வேண்டுமென முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். இது ஜைனிற்கு பெரும் எரிச்சலூட்டும் பிரச்சனையாக உருவெடுக்கிறது. இதில் மதம் மற்றும் சாதி ரீதியான எந்த வெளிப்பாடுமற்று மன உணர்வுகள் ரீதியாக, குற்ற மனப்பான்மை, ஏமாற்றம், கையறு நிலை, துரோகம், மன அழுத்தம் போன்றவற்றை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. 

இத்திரைப்படத்தின் மிக முக்கியமான இடம் எதுவென்றால், அலிஷா தன்னுடைய தந்தையை பற்றி அறியும் இடம்தான். தன்னுடைய மனைவியின் மீது இருந்த தவறை 25 ஆண்டுகளாக சொல்லாமல் மறைத்து வைத்திருந்தது. தந்தைக்கு மகளின் மீது இருக்கும் கரிசனம், அவளின் நம்பிக்கையை குறைக்காமல் இருக்கும் ஆணின் பேராண்மையை நமக்கு கடத்துகிறது. நாமோ அல்லது மற்றவர்கள் நமக்களித்த இழைத்த தவறுகளை சரி செய்ய முடியும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது. மற்றவர்களிடம் ஏற்பட்ட காயங்களால் அவர்கள் தீயவர்கள் அல்லது ஏமாற்றுபவர்களாக அடையாளப் படுத்துவதை விடவும் அவர்களிடம் இருக்கும் மிகச்சிறந்த நல்லவைகள் அவர்களை மரியாதை செலுத்துவதற்கும் அன்பு செலுத்துவதற்கும் உரியது என்பதை புகட்டுகிறது. 


இறுதியில் அலிஷாவின் தாய், தியாவின் தந்தையுடன் உறவில் இருந்ததை தியா அலிஷாவிற்கு கூறுகிறாள். இதுவரை தன்னுடைய தந்தையின் சித்ரவதையால் தாய் இறந்ததாக எண்ணி கொண்டிருந்தாள். ஆனால் தன்னுடைய தாயினுடைய துரோகம் தந்தையை எந்தளவிற்கு புண்படுத்தக்கூடிய ஒன்றாக இருந்ததை அலிஷா புரிந்து கொள்கிறாள். இறுதியில் தந்தையிடம் இதை ஏன் முன்கூட்டியே கூறவில்லை என்று கேட்கிறாள்." உன்னுடைய தாயின் மீதிருந்த அளவற்ற நம்பிக்கையை என்னால் சிதைக்க முடியவில்லை என்கிறார். அவளிடம், அவள் செய்ததை விடவும் எண்ணற்ற நல்ல விசயங்கள் இருந்தது" என பகிர்ந்து கொள்கிறார். தவறுகளை காரணம் காட்டி உறவுகளை இழப்பதை காட்டிலும் அதை புரிந்து கொண்டு, கடினமானவற்றை கடந்து செல்வது என்பது வாழ்க்கையை மன அழுத்தங்களில் இருந்தும், நேசிப்பவர்களின் பிரிவில் இருந்தும் எளிமையாக்குகிறது.

அலிஷா கர்ப்பமானதை மிகுந்த வலிகளுடன் பகிர்ந்து கொள்கிறாள். ஒருபக்கம் நிதிபற்றாக்குறை எனும் நிலையும், இன்னொருபுறம் தியாவிடமிருந்து பிரியமுடியாத சிக்கலும் ஜைனின் சமநிலையை இழக்கச் செய்கிறது. தியா உண்மையாக ஜைனை நேசிக்கிறாள் என்பது ஜைனும் அலிஷாழும் நன்றாக அறிந்திருந்தார்கள். அலிஷா தியாவிடம் உண்மையை கூறி மன்னிப்பு கேட்பதாக மன்றாடுகிறாள். தியாவிற்கு இந்த உண்மை தெரியுமானால் அவளுடைய சொத்துகள் விற்று நிதிநிலையை சரி செய்யும் பணி முடக்கமடையும். அதனால் தன்னுடைய நிறுவனத்தை மூடும் நிலைக்கு தள்ளப்படலாம் என ஜைன் கருதுகிறான். 


ஆறுதல் படுத்திக்கொள்ள அலிஷாவும் ஜைனும் ஒரு படகில் மீண்டும் தங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர். மீண்டும் தியாவை விட்டு விலகி நாம் சேர்ந்து வாழப் போவதாக நம்பிக்கையை கூறுகிறான். அலிஷா அவனை நம்புகிறாள். சற்று விலகிய தருணத்தில் ஜிட்டேஷும் ஜைனும் உரையாடுவதை கணிணி குறுஞ்செய்தி இணைப்பில் காண்கிறாள். தன்னுடைய வயிற்றில் வளரும் கருவையும் தன்னையும் கொல்ல விஷத்தை காண்கிறாள். முன்பே இருவரும் திட்டமிட்டிருந்ததை அறிந்து கொள்கிறாள். உடனடியாக இதை தியாவிற்கு தெரிவிக்க முயற்சிக்கிறாள். விஷத்தை பருக ஜைன் வற்புறுத்துகிறான். இருவருக்கும் ஏற்பட்ட மோதலில் ஜைன் கப்பலில் இருந்து இடறி விழுந்து கடலுக்குள் இறந்துவிடுகிறான். அவளுடைய வாழ்வில் கொலைக்குற்றத்திலிருந்து தப்பிப்பதும் குற்றவுணர்விலிருந்து தப்பிப்பதும் அவளால் இயலாத ஒன்றாக மாறுகிறது. 

அலிஷாவின் அம்மா தற்கொலை செய்து கொண்டதற்கு பின்னால் இருக்கும் உண்மையை தியா அலிஷாவுடன் தன்னுடைய துக்கத்தின் வெளிப்பாடாக கூறுகிறாள். தன்னுடைய தந்தையுடன் கொண்டிருந்த உறவுதான் அலிஷாவினுடைய அம்மாவின் தற்கொலைக்கு காரணம். தந்தை, தன்னுடைய சொத்தில் சரி பாதியை தியாவிற்கும் அலிஷாவிற்கும் மாற்றியதும் இதை அலிஷா விற்கு தெரியாமல் தானும் தன்னுடைய குடும்பமும் மறைத்ததாக, குற்றவுணர்வுடன் அலிஷா விடம் மன்னிப்பு கோருகிறாள் தியா. பெண்கள் வளரும் பருவத்தில் அவர்களுடைய தாயிற்கு ஏற்படும் பாதிப்பு தன்னுடைய வாழ்க்கையில் நேர்ந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள். இதுவே சில நேரங்களில் அதீத நம்பிக்கைக்கும், நம்பிக்கையின்மைக்கும் ஆட்பட்டு மனவேதனைகளைக்கு காரணமாகின்றது. 

கெஹ்ரயான் ஒரு திரைப்படமாக எடுக்க முடியாத புத்தகத்திற்கு சமமான சினிமாவாகும். எழுத்தாளர்கள் டெவித்ரே தில்லான், பாத்ரா, சுமித் ராய் மற்றும் யாஷ் சஹாய் ஆகியோர் இத்திரைப்படத்தில் பணியாற்றியுள்ளனர். கதைக்களத்தை த்ரில்லர் பாணியுடன் பார்வையாளர்கள் ஒரே குறிக்கோளை நோக்கி பயணிப்பதுமாக உருவாக்கப்பட்டுள்ளது.


இறுதியில் ஜைனினுடைய இறப்பிற்கு பிறகும் காதலுடன் கடந்த பாதைகளை சில மனிதர்கள் நினைவு படுத்துகிறார்கள். அதுவரை அவர்களை காதலர்களாக கண்டு கடந்துவந்த நபர்கள், பிரிவிற்கு பிறகு எதிர்கால வாழ்வில் தன்னுடன் இடம்பெறத் தான் போகிறார்கள். அவர்களை நாம் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். நல்ல நினைவுகள் மலரும் பொழுதே அதை தக்க வைக்கும் ஆற்றலையும் உறவுகளின் வாயிலாக உருவாக்கி கொள்ள வேண்டும். இரண்டு வருடங்களுக்கு பிறகு வரும் ஒரு மூதாட்டி அலிஷாவை ஜைனுடன் தனியாக சந்தித்த அனுபவத்தை ஆச்சரியத்துடன் நினைவு கூறுகிறாள். ஆனால் அருகில் தியா இருக்கிறாள். என்ன கூறுவதென்ற தயக்கத்துடன் அலிஷா நிற்கிறாள். அவளுடைய பதில் என்னவாக இருந்திருக்கும்? தியாவை அவள் எவ்வாறு சமாளித்திருப்பாள்? என்பது கேள்விகுரியாகவே முடிவடைகின்றது. 

அந்த வகையிலேயே த்ரில்லர் அனுபவத்தை கடைசி காட்சியிலும் இயக்குனர் ஷகுன் பத்ரா நிலை படுத்தியுள்ளார். ஒளிப்பதிவாளர் கௌஷல் ஷா, கதாபாத்திரங்களின் தேவையான இடங்களில் நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். மிக அமைதியான வார்த்தைகளால் விளக்க முடியாத தருணங்களை காட்சிகளின் மௌனங்களில் படம் பிடித்துள்ளார். எடிட்டர் நித்தேஷ் பாட்டியா, மற்றும் தொழில்நுட்ப குழுவினர் தங்கள் கதைக்களத்தை ஒரு டெம்போ மற்றும் டோனருடன் ஊக்கப்படுத்தியுள்ளனர். மென்மையான திரைப்படம் போல தோன்றினாலும் அதில் வாழும் கதாபாத்திரங்களின் அழுத்தம் நாம் அன்றாட உறவுகளிடம் எதிர் கொள்ளக்கூடிய ஒன்றுதான்.